க.பொ.த. உயர்தரப் பரீட்சைத் திகதியை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட விசேட ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஒக்ரோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2022ஆம்ஆண்டுக்கான மூன்றாம் தவணை டிசெம்பர் மாதம் 23ஆம் திகதிவரை நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
அந்தக் காலப்பகுதிக்குள் 2022 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தை முழுமைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். அனைத்து தரப்புகளுடனும் பேச்சு நடத்தி இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
அதேநேரம் பாடசாலைச் சீருடை விநியோகம் தொடர்பாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
அதேவேளை, 2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் அனைத்துச் செயன்முறைப் பரீட்சைகளும் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
Discussion about this post