புதிய சிறப்புப் பொருள்கள் வரி விதிப்பின் கீழ் அனைத்துப் இறக்குமதிப் பொருள்களின் விலைகளும் நேற்று முதல் 15 சதவீதம் முதல் 200 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை ரூபா மற்றும் டொலர் பற்றாக்குறை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில் அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த வரி அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொருளாதார நெருக்கடி உச்சம் பெற்றுள்ள நிலையில் இலங்கை ரூபா மற்றும் டொலர் கையிருப்பு இன்றி பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்காக அரசாங்கம் மாதாந்தம் ரூபா நோட்டுக்களை அச்சடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
நாட்டின் பண வீக்கம் பெரிதும் உயர்ந்துள்ள நிலையில், அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெறுமதி சேர் வரி (வற் வரி), தொலைத்தொடர்பு வரி என்பன நேற்றுமுன்தினம் அதிகரிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் இறக்குமதிப் பொருள்களுக்கான வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான ரயர்கள் மீதான வரி 50 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வளிச் சீராக்கிகள் (ஏசி), சலவை இயந்திரங்கள், ரைஸ் குக்கர், மைக்ரோவேவ், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் அலைபேசிகள் மீதான வரி 100 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சாதனங்களுக்கான வரிகள் 15 சதவீதத்தால் உயர்ந்துள்ளன.
அதேவேளை, சொக்லெட் பொருள்களின் விலைகள் 200 சதவீதத்தால் உயர்வடையும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இறக்குமதி செய்யப்படும் தயிர், பட்டர் மற்றும் பால் பொருள்கள் மீதான சிறப்புப் பொருள் கட்டணம் ஆயிரம் ரூபாவில் இருந்து 2 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
Discussion about this post