கச்சதீவை இந்தியா கோருவதை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, கச்சதீவைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் எழுந்துள்ளது. கச்சதீவை இந்தியாவுக்குக் கொடுப்பதன் மூலம் வடக்கு மீனவர்களின் நிலைமை மேலும் மோசமடையும்.
இப்போதே இந்திய மீனவர்கள் மன்னார் முதல் பருத்தித்துறைவரை வந்து மீன்பிடியில் ஈடுபடுவதுடன், எமது வளங்களை இல்லாது செய்வதைக் காணமுடிகின்றது.
50 ஆண்டுகளுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவு இலங்கையிடம் இருக்கின்றது. மீண்டும் இந்தப் பிரச்சினையைத் தொடங்குவது சர்ச்சைகளை ஏற்படுத்தும்.
அடுத்ததாக நாட்டில் ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். ஆளுநரின் அதிகாரங்களும் குறைக்கப்பட வேண்டும். ஆளுநர் என்பவர் நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக இருக்க முடியாது.
உருவாக்கப்படும் அரசமைப்புத் திருத்தத்தில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்படாது அதை நாம் ஆதரிப்பது சரியான விடயமாக இருக்காது.
தமிழ் மக்களைப் பாதிக்கக்கூடிய உள்ளடங்கங்களை அசரமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்க வேண்டும் என்று தெற்கில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வைத் தரக்கூடியவாறு திருத்தத்தை உருவாக்க மாட்டார்கள்.
அதனால் வரைபை சரியாக ஆராய்ந்தே அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க முடியும்.-என்றார்.
Discussion about this post