அரசமைப்பின் 21ஆவது திருத்தம் முறையாக நிறைவேற்றப்படாவிடின் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம். அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ளோம் என விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடல் ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பொறுப்பெற்றமை கட்சிக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. கட்சியில் இருந்து நாங்கள் விலகவில்லை. நாடு பெரும் நெருக்கடியை எதிர்க்கொண்டிருக்கும் போது கட்சி மட்டத்தில் இருந்துக்கொண்டு அரசியல் செய்வது சிறந்ததாக அமையாது.
அரசியல் ஸ்தீரத்தன்மையை பேண வேண்டும் என்பதற்காக அமைச்சு பதவிகளை ஏற்றுள்ளோம். சம்பளம் பெறாமல் அமைச்சு பதவியினை வகிக்க தீர்மானித்துள்ளேன். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சகல தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.
அரசமைப்பின் 21 ஆவது திருத்தம் முறையாக நிறைவேற்றப்படாவிடின் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம். அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானத்துடன் உள்ளார்கள். மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து சகல அரசியல் கட்சிகளும் 21ஆவது திருத்தத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதற்கான தீர்வு குறித்து பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உரம்,எரிபொருள் ஆகியவற்றை தொடர்ந்து விநியோகிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.-என்றார்.
Discussion about this post