வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்ற ஆய்ஷா அக்ரம் என்ற 9 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளமை இலங்கையில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஆயிஷா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பண்டாரகம, அட்டுலுகமவைச் சேர்ந்தவர் சிறுமி ஆயிஷா அக்ரம். கடந்த வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு, பொருள்களை வாங்குவதற்காக ஆயிஷா தாயாரால் அனுப்பப்பட்டிருந்தார். கடைக்குச் சென்ற ஆயிஷா மீண்டும் வீடு திரும்பவில்லை.
உறவினர்களும், அயலவர்களும் தேடியபோதும் ஆயிஷாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆயிஷா கடைக்கு வருவதும், கடையில் இருந்து வெளியேறுவதும் அங்குள்ள பாதுகாப்புக் கமராவில் பதிவாகியிருக்கின்றது. காணாமல் போயிருந்த சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக 3 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன.
நேற்று மாலை வீட்டுக்கு அருகே உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் இருந்து ஆயிஷாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சதுப்பு நீருக்குள் முகம் அமிழ்த்தப்பட்ட நிலையில் ஆயிஷாவின் உடல் காணப்பட்டது.
ஆயிஷாவின் வீட்டுக்கும் கடைக்கும் இடைப்பட்ட இடத்தில் சுமார் 150 மீற்றர் தொலைவுக்குப் பாதுகாப்புக் கமராக்கள் இல்லை. அந்த இடத்தில் வைத்தே ஆயிஷா கடத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இந்தச் சம்பவம் இலங்கை முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆயிஷாவின் உடல் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
Discussion about this post