மருத்துவர்கள் உள்பட சுகாதாரப் பணியாளர்களின் சம்பளம் எந்தக் காரணத்தைக் கொண்டும் குறைக்கப்படாது. அதேநேரம் அவர்களது சம்பளத்தில் வெட்டப்பட்ட தொகை இன்னும் இரு வாரங்களில் மீளளிக்கப்படும்.
இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மற்றும் அமைச்சின் செயலர் சிறிவர்தன ஆகியோர் உறுதியளித்துள்ளதால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகக் குழு உறுப்பினருமான மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்ததாவது, சுகாதார அமைச்சின் நிதி முகாமைத்துவப் பணிப்பாளர் சுகாதார ஊழியர்கள், மருத்துவர்களுடைய கொடுப்பனவுகளை வெட்டும்படி பணித்திருக்கின்றார்.
இவ்வாறு கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடல் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கும் நிதி அமைச்சினுடைய செயலாளருக்கும் மற்றும் உயர் அதிகாரிகளுக்குமிடையே இடம்பெற்றது.
எந்தவொரு அடிப்படையிலும் அரச ஊழியர்களுடைய சம்பளம் குறைக்கப்பட வேண்டும் என்றோ அல்லது சுகாதார ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும் என்றோ அல்லது மருத்துவர்களுடைய கொடுப்பனவுகள் குறைக்கப்பட வேண்டும் என்றோ எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை.
ஆனால் இந்தப் பொருளாதார நெருக்கடியை மிகவும் வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றே அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சுகாதார அமைச்சிலே இருக்கின்ற பிரதான நிதி அதிகாரியின் தன்னிச்சையான அதிகார முடிவுகளின் அடிப்படையிலேயே கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பலர் அசௌகரியத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகள் யாவும் முன்னர் போல வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலர் நேற்றைய சந்திப்பில் எமக்கு உறுதியளித்தார்.
அத்தோடு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தோடு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கும் இடம்பெற்ற சந்திப்பிலும் எந்தவொரு காரணத்துக்காகவும் சுகாதார ஊழியர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கொடுப்பனவுகள் குறைக்கப்பட மாட்டாது என்றும் சுகாதாரத் துறையை தொடர்ச்சியாகவும் வினைத்திறனாகவும் நடத்திச்செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
தற்போது குறைக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் யாவும் மீள கையளிக்கப்படும் என்ற உறுதியையும் சுகாதார அமைச்சர் வழங்கினார். குறைந்தது இன்னும் ஒரு வார காலத்துக்குள் இந்த நடவடிக்கைகள் யாவும் மேற்கொள்ளப்படும் என்றும் இனிவரும் காலங்களில் எந்தவொரு காரணத்தைக் காட்டியும் சுகாதார ஊழியர்களின் மருத்துவர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.
இதனைக் கருத்திற்கொண்டு அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தற்போது முன்மொழியப்பட்டுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையை ஒருவார காலத்துக்குப் பிற்போடப்பட்டது. தற்போது குறைக்கப்பட்ட கொடுப்பனவை ஒரு வார காலத்துக்குள் மீள வழங்காவிட்டால் ஒத்திவைக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை ஒரு வார காலத்துக்குப் பின்னர் மீள முன்னெடுப்போம் என்றார்.
Discussion about this post