ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியிருந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் அந்தக் கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரின.
அதையடுத்து இந்த யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்மொழிந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை முன்னெடுக்க வேண்டாமென 119 வாக்குகளும், பிரேரணையை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தி 68 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அதையடுத்து, இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளை நிலையியற் கட்டளைக்கு அமைவாக முன்னெடுப்பதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யோசனையை நிராகரிக்கின்றேன் என்று சபாநாயகர் அறிவித்திருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், பிரேரணையை முன்னெடுக்க வேண்டாம் என்று வாக்களித்தார். ரணில் விக்கிரமசிங்க, பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post