நாட்டில் அரசாங்கம் இல்லாத நிலையில், இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன நிராகரித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கான எவ்வித எண்ணமும் இல்லை. இலங்கையில் அவ்வாறு நடந்ததும் இல்லை. 60 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதற்கான முயற்சி இடம்பெற்றது என்ற தகவலொன்று உள்ளது.
ஆனால் இங்கு ஒருபோதும் இராணுவ ஆட்சி சாத்தியப்படாது. அதற்கான தேவைப்பாடும் படையினருக்கு கிடையாது. அரசமைப்பின் பிரகாரமே இராணுவம் செயற்படும்.
நாட்டில் வன்முறைகள் பாரதூரமானால் அவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இராணுவத்துக்கு வழங்கப்படுமே தவிர, அது ஒருபோதும் இராணுவ ஆட்சியாக மாறாது.” – என்றார்.
அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், இல்லாத அமைச்சுக்கு எப்படி செயலாளராக இருக்க முடியும், உங்களின் உத்தரவுகள் சட்டவலுவானவையா என்ற கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு செயலர், “நான் பலவந்தமாக பதவிக் கதிரையில் அமர்வதறகு ஆசைப்படும் நபர் கிடையாது. அமைச்சரவை கலைக்கப்பட்டிருந்தாலும், எனக்கு மீள் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக சட்டமா அதிபரிடமும் ஆலோசனை பெறப்பட்டு, அரசமைப்பின் பிரகாரமே எனது நியமனம் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் பாதுகாப்பு செயலாளராக உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது என்று குறிப்பிட்டார்.
Discussion about this post