‘கோட்டா கோகம’ போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிறைக்கைதிகளும் களமிறக்கப்பட்டுள்ளனர் என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த தகவலை சிறைச்சாலை ஆணையாளர் மறுத்துள்ளார்.
தமக்கு இடையூறு விளைவித்த சிலரை, போராட்டக்காரர்கள் நேற்று தடுத்து நிறுத்தினர். அவர்களின் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம், புனர்வாழ்வுபெறும் சிறைக்கைதிகள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து போராட்டக்காரர்களை தாக்க கைதிகளும் களமிறக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மேலோங்கியது.
இது தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்கவிடம் வினவியபோது,
” வட்டரெக்க சிறைச்சாலை வேலை முகாமில் உள்ள கைதிகள், நாளாந்தம், அதிகாரிகளின் பாதுகாப்பு கண்காணிப்புடன் நிர்மாண வேலைகளுக்கு அழைத்துச்செல்லப்படுவது வழமை . அவ்வாறு சென்று, பின்னர் சிறைச்சாலை நோக்கி திரும்பியவர்கள்மீதுதான் தவறான புரிததால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவர்கள் எவ்வித சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை. அவர்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன் படுத்தவும் இல்லை.” – என்றார்.
அதேவேளை , நிர்மாணப் பணிகளுக்குச்சென்ற கைதிகள் சிலர் காணாமல்போயிருப்பதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. 58 கைதிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
அவர்கள் தொடர்பான தகவல் இருந்தால் சிறைச்சாலை திணைக்களத்துக்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்துமாறு பொது மக்கள் கோரப்பட்டுள்ளனர்.
Discussion about this post