கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம், குருநகரில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர்கள் 8 மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நேற்றுச் சரணடைந்தனர்.
நீதிமன்றில் சரணடைந்த மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி குருநகரில் பட்டப்பகலில் வீதியில் வைத்து ஜெரன் என்ற 22 வயது இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
அதேதினம், நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த குழு ஒன்றின் மீது, மோட்டார் சைக்கிள்களில் வந்த மற்றொரு குழு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியது. அதில் இருவர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 2018ஆம் ஆண்டு நடந்த மோதல் சம்பவம் ஒன்றின் தொடர்ச்சியாகவே இந்தக் கொலை நடந்தது என்று கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவம் நடந்து 9 நாள்களின் பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் 6 பேர் சரணடைந்தனர்.
அவர்கள் உட்பட 14 பேர் இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முதன்மைச் சந்தேகநபர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர்கள் சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.
Discussion about this post