இந்த ஜனாதிபதி அல்லது பிரதமரின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாடு வெளிச்சத்துக்குப் பதிலாக இருளை நோக்கியே செல்கின்றது. மக்களின் கோரிக்கைக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்கு எதிரானதும் மற்றும் பிரதமர் தலைமையிலான அரசுக்கு எதிரானதுமான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் உடனடியாக வாக்கெடுப்புக்கு வரவேண்டும். புதிய பிரதி சபாநாயகரை உடனடியாக நியமிக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நியாயமான வரிக் கொள்கை பற்றி எனக் கூறும்போது கைதட்டுபவர்கள், இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டு வந்த கோடீஸ்வரர்களுக்கு வரிச்சலுகை வழங்கும்போதும் கைதட்டுவார்கள். கோடிக்கணக்கான டொலரை நாட்டுக்கு இழக்கச் செய்த பண்டோரா திருடர்களிடமிருந்து உடனடியாகப் பணத்தை மீட்குமாறுக் கோரிக்கை விடுக்கின்றோம்.
நலன்புரித் திட்டங்களை அரசு கொள்ளையடிக்கக்கூடாது. சர்வதேச நன்கொடை மாநாடொன்றை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2015ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கியது தவறு என அரசு கூறுவதைக் கண்டிக்கின்றோம். சம்பள உயர்வால் அரசுக்கு வருமானம் இழக்காது.
அரசின் 30 மாத கால தாமதச் செயற்பாடுகளாலேயே நாடு இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றாவது உலக நாடுகளுடன் கொடுக்கல் – வாங்கல்களை முன்னெடுக்குமாறு அரசைக் கோருகின்றோம். பிரச்சினை நீடித்தால் லெபனானுக்கு ஏற்பட்ட நிலைமையே இலங்கைக்கு ஏற்படும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். ‘ஏற்படும்’ என்பது அல்ல, அந்நிலைமை ஏற்பட்டுவிட்டது.
அதற்கு அரசுதான் பொறுப்புக்கூற வேண்டும். தலைக்கு மேல் வெள்ளம் வந்த பிறகு, அணை கட்டுவது குறித்து சிந்திப்பதில் பயன் இல்லை.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும்; பிரதமர் வீடு செல்ல வேண்டும். மக்களின் கோரிக்கை இதுவே. அதற்காகவே நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை முன்வைத்துள்ளோம்-என்றார்.
Discussion about this post