பிரதி சபாநாயகர் பதவிலிருந்து இன்று முதல் முழுமையாக விலகிவிட்டேன். இது தொடர்பில் ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் உரிய வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பிரதி சபாநாயகர் பதவியை வகித்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, அரசுக்கான ஆதரவை கடந்த 5 ஆம் திகதி விலக்கிக்கொண்டது. நானும் பதவி விலகல் கடிதத்தைக் கையளித்தேன். ‘பிரதி சபாநாயகர்’ பதவியென்பது சுயாதீனம் என்பதால், இந்தமாதம் 30 ஆம் திகதிவரை அந்தப்பதவியில் இருந்து இருப்பதற்கு தீர்மானித்தேன். அந்தவகையில் இன்றுடன் முழுமையாக பதவி விலகிவிட்டேன்.
எனவே, மே 4 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது, முதல் விடயமாக பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஆளுந்தரப்பில் இருந்தும், எதிரணியில் இருந்தும் இருவர் போட்டியிடுவார்கள். தமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றதென கூறிவரும் அரசுக்கு, இந்தத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அது பெரும் பின்னடைவாக அமையும்.
அதேபோல எதிரணி இரட்டை நிலைப்பாட்டில் உள்ள உறுப்பினர்களை கண்டறிவதற்கான ஒரு கருவியாக பிரதி சபாநாயகர் தேர்வை, ஐக்கிய மக்கள் சக்தி பயன்படுத்தவுள்ளது.
Discussion about this post