“ராஜபக்சக்களும் இந்த அரசும் உடன் பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், எதிர்வரும் 6 ஆம் திகதி வீதிக்கு இறங்கி, கறுப்பு கொடிகளைப் பறக்கவிட்டு, ராஜபக்சக்களை விரட்டும் வரை போராட்டம் தொடரும்.”
இவ்வாறு தொழிற்சங்க கூட்டமைப்புகளின் பிரதிநிதியும், ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க, தொழிற்சங்கங்களின் சார்பில், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசதுறை, அரசசார்பற்ற தனியார் துறை, பெருந்தோட்டத்துறை, வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட பல துறைகள் கூட்டாக இணைந்தே இதற்கான நடவடிக்கையில் இறங்கின.
அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள், மின்சார சபை தொழிற்சங்கங்கள், சுகாதார தொழிற்சங்கங்கள், துறைமுக ஊழியர்சார் தொழிற்சங்கங்கள், தபால் துறைசார் தொழிற்சங்கங்கள், பொருளாதார மத்திய நிலையங்களில் உள்ள தொழிற்சங்கங்கள், வங்கிசார் தொழிற்சங்கங்கள் உட்பட மேலும் பல தொழிற்சங்கங்கள், பணி புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
பொருளாதார மத்திய நிலையங்கள், தொழில் பேட்டைகள் என்பனவும் மூடப்பட்டிருந்தன. இதனால் நாடு இன்று பகுதியளவு முடங்கியது என்றே கூறவேண்டும்.
வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடி, இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அரசு பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அரச மற்றும் 50 வீதமான தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டனர்.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்தது என்று தொழிற்சங்க பிரமுகர்கள் தெரிவித்தனர்.
” ராஜபக்ச குடும்பமும், இந்த கள்ள அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். மக்கள் தமக்கு தேவையான ஆட்சியை முன்னெடுக்க இடமளிக்க வேண்டும். இல்லையேல் பதவியில் இருந்து விரட்டும் நடவடிக்கை 6 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும். ஆட்சியாளர்களை ஏழு கடல்களை தாண்டிச்சென்றாலும் விடமாட்டோம், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீள நாட்டுக்கு கொண்டுவருவோம்.” – என்று வசந்த வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
Discussion about this post