இலங்கையின் வளங்கள் சூறையாடப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஸ்டீவன் கோர்ஸ்போர்ட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த இலங்கையர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி உறுப்பினராவார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலைமை தொடர்பாக தான் அறிந்து கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ள அவர், தனியொரு குடும்பமே அதற்கு காரணம் என அறிந்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
இலங்கையின் சொத்துக்களை அபகரித்ததன் மூலம் தற்போதைய நிலை உருவாவதற்கு யார் காரணம் என்பது தொடர்பாக காங்கிரஸ் விசாரணைகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அவ்வாறான விசாரணைகளை அமெரிக்காவின் நியாயாதிக்க எல்லைக்குள் முன்னெடுக்க முடியும்.
அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழுவுக்கு தலைமை தாங்கும் கிரகரி மீக்ஸ் உடன் இணைந்து விசாரணைகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன்.
இலங்கையின் சொத்துக்களை அபகரித்த இலங்கை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக விளங்கும் அமெரிக்க பிரஜைகள் தொடர்பாக காங்கிரஸ் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது என்றார்.
Discussion about this post