நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் கொள்கையளவில் இணங்கியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணிகளாக செயற்படும் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான தற்போதைய அமைச்சரவை பதவி விலகிய பின்னர், அமைப்பதற்கு உத்தேசிக்கப்படும் சர்வக்கட்சி அரசின் வியூகம், அவ்வரசில் பொறுப்புகளை வகிக்கக்கூடிய நபர்கள், அவ்வரசு செயற்படக்கூடிய கால எல்லை ஆகியன தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதி தலைமையில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (29) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும், அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் தலைவர்களுக்குமே இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வைகாண சர்வக்கட்சி அரசொன்றை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள், பேராயர் உட்பட ஆன்மீக தலைவர்களும், சில அரசில் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கோரிக்கை விடுத்திருந்தன. இதற்கமையவே கொள்கை அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்தார் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post