ஆசிரியர்கள், அதிபர்கள் சுகவீன விடுப்புப் போராட்டத்தை நாளை நடத்தவுள்ளதால், நாளை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்வதற்கு பொருளாதார ரீதியிலும், போக்குவரத்து ரீதியிலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
தற்போதைய நிலைமைக்குத் தீர்வாக பாடசாலை மாணவர்களை அவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டும், என்றும் ஆசிரியர்களை அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்கம் கோரியிருந்தது.
அந்தக் கோரிக்கையை அரசாங்கம் மறுத்திருந்த நிலையில், நாளை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை அரச பாடசாலைகள் அனைத்திலும் பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என்றும், பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பும் பெற்றோர் அவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post