மத்திய குருதி வங்கியில், குருதியை சேமிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, குருதியேற்றத்துக்கான உபகரணங்களுக்கும், அடுத்த வாரமளவில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் கே திலக்கரத்ன, குறிப்பிட்ட காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமையால், நோயாளர்களுக்கான சிகிச்சைப் பணிகளுக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனைக் கட்டமைப்பில், மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கையிருப்பு தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய குருதி வங்கி உள்ளிட்ட ஏனைய அனைத்து குருதி வங்கிகளிலும், குருதியை சேமிப்பதற்கான பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட அவசியமான ஏனைய உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குருதியேற்றத்திற்கான உபகரணங்கள் கிடைக்காவிட்டால், நாட்டின் வைத்தியசாலைக் கட்டமைப்பில் குருதியேற்றத்தில் பெரும் பிரச்சினை ஏற்படக்கூடும்.
எனவே இந்தப் பிரச்சினையைத் தீரப்பதற்காக, இயன்றளவு உச்சப்பட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சரிடம் கோரப்படடுள்ளது என்று அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் கே திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், மத்திய குருதி வங்கியின் பணிப்பாளரான வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்கவிடம் எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த அவர், குருதியை சேமிப்பதற்கான பிளாஸ்ரிக் பைகளின் கையிருப்பில் ஓரளவு வீழ்ச்சி நிலவினாலும், இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, முகாமைத்துவ பணிகளை மிகவும் அவதானத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்று விசேட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய குருதி வங்கியின் பணிப்பாளரான மருத்துவர் லக்ஸ்மன் எதிரிசிங்க தெரிவித்தார்.
Discussion about this post