ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும் விவகாரம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே சபையில் நேற்றுக் கடும் சொற்போர் மூண்டது. இருவரும் சரமாரியாக விமர்சனக் கணைகளைத் தொடுத்தனர்.
ஒரு கட்டத்தில் கடுப்பான எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ‘பச்சைப் பொய்யன்’ என விமர்சித்தார்.
“கட்சித் தலைவர்கள் இணைந்து கோரிக்கை விடுத்தால் பதவி விலக நான் தயார்” என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் நேற்று சபையில் அறிவித்தார்.
இது தொடர்பான தகவல் அனைத்து ஊடகங்களிலும் காட்டு தீ போல் பரவியது. சர்வதேச ஊடகங்கள் கூட அதைப் பிரதான செய்தியாக வெளியிட்டிருந்தன.
அதையடுத்து தான் அவ்வாறு குறிப்பிடவில்லை எனவும், தனது அறிவித்தலை எதிர்க்கட்சித் தலைவர் தவறாக அர்த்தப்படுத்தியுள்ளார் எனவும் சபாநாயகர் சபைக்கு தெரியப்படுத்தினார். அதனால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடுப்பானார்.
“சபாநாயகரே, கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றின்போது நீங்கள் அவ்வாறு அறிவித்தீர்கள். தற்போது இல்லையென மறுக்கின்றீர்கள். நீங்கள் சொல்வதில் உண்மை இல்லை என்பதை மட்டும் என்னால் தெளிவாக குறிப்பிட முடியும்.” என்று சஜித் சீற்றத்துடன் பதிலளித்தார்.
அப்போது குறுக்கீடு செய்த சபாநாயகர், “நீங்கள் சொல்வதுதான் பொய், தவறான அர்த்தப்படுத்தலை வழங்கிவிட்டீர்கள். 113 பேரின் ஆதரவு இருந்தால், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை ஜனாதிபதி வழங்குவார் என்றுதான் குறிப்பிட்டிருந்தார். 113 பேரின் ஆதரவு இருந்தால் அதனை நிரூபித்து ஆட்சியை பொறுப்பெடுங்கள்.” என்று குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், “நீங்கள் சொன்னதைத்தான் நான் சபையில் சொன்னேன், தவறான அர்த்தப்படுத்தலை வழங்கவில்லை. அப்படியானால் நீங்கள் கூறியதில் தவறு இருந்திருக்கலாம்.
எனது பக்கத்தில் தவறில்லை. நான் பொய்யுரைக்கின்றேனோ? சபாநாயகரே, பச்சையாக பொய்யுரைக்க வேண்டாம். நீங்கள் சபாநாயகர் அல்லர், பொய்யன் ” எனக் கடுந்தொனியில் குறிப்பிட்டார்.
அதையடுத்து சபாநாயகரும் கடுப்பானார். “நீர் பதவிக்கு மதிப்பளியும், நான் அவ்வாறு குறிப்பிடவில்லை” என எதிர்க்கட்சித் தலைவரை நோக்கித் தெரிவித்தார்.
“எனக்கு பொய்யுரைக்க வேண்டிய தேவை கிடையாது. ஜனாதிபதி பதவி விலகுவார் என நீங்கள் குறிப்பிட்டீர்கள். எனது அறிவிப்பை நான் மீளப்பெறமாட்டேன்.” என சஜித் மீண்டும் அறிவித்தார்.
“ஜனாதிபதியைப் பதவி விலகுங்கள் என்று நாடாளுமன்றத்தால் கோர முடியாது. 113 பேரின் ஆதரவு இருந்தால் ஆட்சி கையளிக்கப்படும் என்றுதான் கூறினேன்.” என்று சபாநாயகரும் பதிலளித்தார்.
Discussion about this post