தெரு நாய்கள் மற்றும் பூனையின் நகக் கீறல்களுக்கு ஆளான குடும்பத் தலைவர் நீர் வெறுப்பு நோய்க்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் என்ற 35 வயதுக் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
இவர் விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாததால் நீர் வெறுப்பு நோய்க்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ அதிகாரி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கு முன்னர் தெரு நாய் கடிக்கு இலக்கான சூசைநாதன், அதற்குச் சிகிச்சை பெறத் தவறியிருந்தார். அதன்பின்னர் இரு மாதங்களுக்கு முன்னர் பூனையும் அவரை நகங்களால் கீறியுள்ளது.
பருத்தித்துறையில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்தபோது அவருக்கு நேற்று இரவு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
Discussion about this post