தீபச்செல்வன்
இலங்கையில் ஒரு இனவழிப்பாளன் கதையின் இறுதி அங்கம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தக் கதையை நிறைவுக்கு கொண்டு வருபவர்கள் சிங்களர்தான். இன்றைக்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை ஒரு பேரிடருக்கும் பெரும் போருக்கும் ஒப்பானது. இதனைக் கண்டு ஈழத் தமிழர்கள் எவரும் மகிழ்ந்துவிட வில்லை. ஆனால் சிங்கள அரசின் வீழ்ச்சி ஈழத் தமிழர்கள் மத்தியில் ஒரு பெருத்த பெருமூச்சை உண்டாக்குகிறது. ஈழத் தமிழினம்மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புப் போரில் பொருளாதார யுத்தம் என்பதும் ஒரு உப பிரிவாகத்தான் இருந்தது. இப்படிப் பார்க்கையில் முள்ளிவாய்க்காலின் சாபம்தான் இன்றைய இலங்கையின் பொருளாதாரத் துயரம் என்று சொல்கிற ஈழத் தாய்மார்களின் வார்த்தைகளில் அர்த்தம் இருப்பதாகவும் தோன்றுகிறது.
வரும் மாதம் மே மாதத்துடன் ஈழ இனப்படுகொலை யுத்தம் நடந்தது பதின்மூன்று ஆண்டுகள். முள்ளிவாய்க்காலில் நம் இனம் குருதி கொப்புளிக்க உடல்கள் சிதற பிய்த்தெறியப்பட்ட நினைவுகளை இன்னும் மறக்க முடியாமல் பெருந்துயரில் உழல்கிறோம். சிங்கள அரசை நோக்கியும் உலகத்தையும் நோக்கியும் நீதிக்கான தாகத்துடன் களத்தில் நின்று போராடுகிறார்கள் ஈழ அன்னையர்கள். பதின்மூன்று ஆண்டுகளாய் தொடரும் இப் போராட்டத்திற்கு எகத்தாளமான பதிலைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. அண்மையில் மார்ச் மாதத்தில் நடந்த ஐ.நா அவைக் கூட்டத்தில்கூட இலங்கை போர் விடயத்தில் பொறுப்புக் கூறலை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாக ஐ.நா அவை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் மனவேதனையுடன் கூறியிருந்தார்.
கடந்த 2019இல் இலங்கையின் இன்றைய அதிபர் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்றார். 2015இல் அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பிறகு ஐந்தாண்டுகள் ராஜபக்ச குடும்பம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத நிலையில் 2019 தேர்தல் மீண்டும் ராஜபக்ச குடும்ப அரசியலை துவக்கியது. கோத்தபாயாவின் வருகையுடன் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய குடும்ப உறுப்பினர்களும் முக்கிய பதவிகளை வகிக்கத் தொடங்கினார்கள். 2019 தேர்தலில் மாத்திரமில்லாமல் தொடர்ந்தும்கூட போரில் தான் பெற்ற வெற்றியை பற்றி மாத்திரமே பேசினார் கோத்தபாய ராஜபக்சே. நாயைப் போல தமிழர்களை நந்திக் கடலில் சுட்டுக்கொன்றேன் என்றும் 69லட்சம் சிங்கள மக்களின் வாக்குகளால் தான் வெற்றி பெற்றேன் என்றும் அவர் கூறியதும்கூட “நான் சிங்கள மக்களின் ஜனாதிபதி, இது இனப்படுகொலைக்காக சிங்களர்கள் அளித்த பதவி” என்ற தோரணையில்தான்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் இருந்து தப்பி விடுவோம், எம்மை யாரும் தண்டிக்க முடியாது என்ற வகையில்தான் ராஜபக்ச குடும்பத்தின் நிலைப்பாடு இருந்தது. முள்ளிவாய்க்காலை யுத்த வெற்றியாகவும் அதன் யுத்த வீரனாகவும் சிங்கள மக்கள் என்றைக்கும் தம்மை பார்ப்பார்கள் என்றும் தமக்கு வீழ்ச்சியே இல்லை என்றும் ராஜபக்ச குடும்பம் நினைத்தது. ஆனால் அந்த விம்பம் இப்போது தாறுமாறாக உடைந்ததுவிட்டது. அண்மையில் இலங்கை தலைநகர் கொழும்புவுக்குச் சென்றிருந்தேன். ஒரு சிங்களர் வீட்டில் தங்கியிருந்த போது அங்கிருந்த பெண்மணி இந்த நாட்டை பிரபாகரன் அவர்களிடம் குடுத்திருந்தால் சிறப்பாக ஆட்சி செய்திருப்பார் என்று கூறினார். இலங்கை தொலைக்காட்சிகள் பலவற்றில் சிங்கள பெண்மணிகள் இதையே கூறுகிறார்கள்.
முப்பது ஆண்டு போரில் வடக்கு கிழக்கு மக்களை தன் வசம் வைத்திருந்த பிரபாகரன் அவர்களுக்கு இப்படியொரு பஞ்ச நிலையை வரவிடவில்லை என்று சிங்களப் பெண்கள் கூறுகிறார்கள். இலங்கையில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நோக்கியும் சிங்கள மக்களை நகர்த்தியிருப்பதும் கோத்தபாய ராஜபக்சவுக்கு கிடைத்திருக்கும் ஒரு பெருத்த தோல்விதான். இது தலைவர் பிரபாகரன் வரலாறு கடந்து பெற்றிருக்கும் வெற்றியும்கூட. அதேபோல மிகப் பெரும் யுத்த வீரன் என்று தன்னை விம்பப்படுத்திய கோத்தபாய ராஜபக்சேவை தூக்கி எறிகிற நிலைக்கும் சிங்கள மக்கள் வந்துவிட்டனர்.
அந்தளவுக்கு சிங்கள மக்கள் நொந்துவிட்டனர். கோத்தபாய சிங்கள மக்களை பொருளாதார ரீதியாக அதளபாதாளத்தில் தள்ளிவிட்டார். கடந்த காலத்தில் எழுபந்தைந்து ரூபாய் விற்ற அரிசி இப்போது இருநூற்று ஐம்பது ரூபாவைக் கடக்கிறது. சீனி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இல்லை. மூந்நூறு ரூபா விற்றிருந்த குழந்தைகளுக்கான பால்மா இப்போது எழுநூறு ரூபாவைக் கடந்தும் அந்த விலைக்கும் பால்மா இல்லாத நிலைதான் இங்கே இருக்கிறது. இருபது ரூபாய் விற்ற ரீ இப்போது நூறு ரூபாய். பெரும்பாலான உணவு விடுதிகள் மூடப்படுகின்றன. எதுவும் இல்லை. எல்லாவற்கும் தட்டுப்பாடு என்பதுதான் இலங்கை பொருளாதாரத்தின் சாரம். சமையல் எரிவாயுவிற்கும் கிருஷ்ணாயிலுக்கும் இலங்கை நகரங்கள் எங்கும் மிக நீண்ட வரிசையில் மக்கள் நிற்கிறார்கள். அப்படி வரிசையில் நின்றவர்களில் பலர் அந்த இடத்திலேயே மயங்கி இறந்து விழுகிற துயரங்களும் நடக்கின்றன.
வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை. வீதிகளில் எரிபொருள் இல்லாத வாகனங்கள் தரித்துக் கிடக்கின்றன. பேருந்துசேவைகள் முடங்குகின்றன. எரிபொருளுக்காக எரிபொருள் நிரப்பு நிலையில் குத்திக் கொலை செய்கிற அளவுக்கும் கொடுமைகள் நடந்துள்ள நிலையில் அங்கே இராணுவத்தை அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. மக்களின் கைகளில் பணம் இல்லை. இருந்தாலும் பொருள் இல்லை. நிறையப் பணம் கொடுத்து மிகவும் குறைந்த பொருளை வாங்கும் நிலையில் ஒரு வடகொரியா போலவும் சோமாலியா போலவும் இலங்கை மாறி வருகிறது. இந்த நிலையில் அதிபர் கோத்தாபாயவின் வீட்டை முற்றுகையிட்டு சிங்கள மக்கள் கடம் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியுள்ள அரசு, அவர்கள் தீவிரவாத பின்புலத்தில் போராட்டம் நடாத்தியுள்ளதாக கூறுகிறது.
அதுபோல இலங்கையில் இராணுவம் மற்றும் காவல்துறை எதனையும் செய்யக்கூடிய அதிகாரத்தை வழங்கும் அவசரகால நிலை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிறு மிகப் பெரிய போராட்டம் இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் நாடு முழுவதும் ஊடரங்கை இலங்கை அதிபர் அமுல்படுத்தியுள்ளார். யுத்த வெற்றியின் புளகாங்கிதத்துடன் துவங்கிய கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சி முடிவு அத்தியாயத்தில் இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் உணவையும் மருந்தையும் தடை செய்து தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவினர் இப்போது அதையே சிங்களர்களுக்கும் செய்கின்றனர். அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பதை கோத்தபாய ராஜபக்சே குடும்பத்தின் வீழ்ச்சியிலும் நாம் கற்றுக்கொள்ள முடிகிறது.
தீபச்செல்வன், ஈழக் கவிஞர் மற்றும் நாவலாசிரியர்.
Discussion about this post