இலங்கை அரசியல் கொதிநிலையில் உச்சத்தை அடைந்துள்ளது. மக்கள் போராட்டங்களும் தீவிரம் பெற்றுள்ள நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது. சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசு இன்று கவிழ்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாதத்துக்கான நாடாளுமன்றக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசை வீட்டுக்குச் செல்லுமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆளும் கட்சியினரின் வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. இதனால் ஆளும் கட்சியிலிருந்து பல தரப்பினரும் வெளியேறத் தயாராகியுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள அதேவேளை, ஆளும் கட்சியிலுள்ள பல தரப்புக்களும் இன்றைய தினம் எதிரணியில் அமர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சாதாரண 113 என்ற பெரும்பான்மையை சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசு இழந்து கவிழும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாடு முழுவதும் சூடு பிடித்துள்ள போராட்டங்களின் ஒரு பகுதியாக, நாடாளுமன்றமும் இன்று முற்றுகையிடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால், சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புத் தொடர்பான விசேட கூட்டம் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post