அவசரகால நிலைமையை அறிவிக்கும் ஜனாதிபதி ராஜபக்சவின் நடவடிக்கை பலருக்கு எதிர்பாராததாக அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது. இலங்கையின் சட்டங்களில் மிகவும் கொடுரமானதான அவசரகால சட்டம் வழமைக்கு மாறான அச்சுறுத்தல் ஆபத்து அல்லது பேரழிவு சூழ்நிலைகளில் மாத்திரம் பயன்படுத்தப்படவேண்டிய ஒன்று என்று சர்வதேச ஊடகமாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதியாக இந்தச் சட்டம் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பயன்படுத்தப்பட்டது.
ஆதாரம் இல்லாமல் அல்லது குற்றமற்றவர் என்ற அனுமானம் இல்லாமல் மக்களை தடுத்துவைப்பதற்கு இந்த சட்டம் அனுமதிக்கின்றது.
அத்துடன் நடமாட்ட சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் போன்றவற்றையும் இந்த சட்டம் மோசமாக கட்டுப்படுத்துகின்றது. பிடியாணையின்றி பொதுமக்களை கைதுசெய்து தடுத்துவைப்பதற்கு பொலிஸாருக்கும் படையினருக்கும் இந்த சட்டம் அதிகாரத்தை வழங்குகின்றது.
ஜனாதிபதி அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளதை தொடர்ந்து தற்போதைய நெருக்கடி நிலை தங்களிற்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து கடும் சீற்றமடைந்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையில் ஈடுபடப்போகின்றது என்ற அச்சம் தோன்றியுள்ளது.
பத்திரிகையாளர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களும் ராஜபக்சவின் வீட்டுக்கு வெளியே பிரசன்னமாகியிருந்த ஒரே காரணத்துக்காக பொலிஸாரால் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டோம் என்று தெரிவிக்கின்றனர். ஏற்பாட்டாளர் ஒருவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு விசாரணைக்காக கொண்டுசெல்லப்பட்டார்.
அவசரகாலநிலையை பிரகடனம்செய்தமையை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது, எனினும் அவசரகாலநிலையை பிரகடனம் செய்த 14 நாள்களில் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டும் என்று பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
Discussion about this post