தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நாங்களே என்று தெரிவித்துள்ள ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், விடுதலைப் புலிகளை வன்முறையாளர்கள் போன்று காட்டிக்கொள்ளும் சுமந்திரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கத் தகுதி உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் என எம்.ஏ.சுமந்திரன் மீது நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், ஜனாதிபதி கோத்தாபயவை சந்திப்பதில்லை என்று ரெலோ எடுத்த முடிவை சுமந்திரன் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார்.
வவுனியாவில் நடந்த நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் சந்தோசமடைவேன் என கூறியிருந்தார். அதுதொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோது செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ரெலோ முக்கிய பங்காற்றியிருந்தது. கிழக்கில் உள்ள தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் பலருக்கும் அது தெரியும்.
சுமந்திரனின் கருத்து தமிழ் அரசு கட்சியின் கருத்தா என்பதை அந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், சுமந்திரனின் கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தை என்பதை இரா.சம்பந்தன் தெளிவுபடுத்த வேண்டும்.
போராட்டத்திலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் ஒரு துளியளவு பங்களிப்பையும் செலுத்தாதவர் சுமந்திரன். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அனைவருக்கும் முன்பாகவே எமது முடிவை அறிவித்தோம். எமது முடிவு ஜனநாயகரீதியிலானது என இரா.சம்பந்தனும் தெரிவித்திருந்தார்.
எம்மையும் புலிகளையும் பற்றி பேசும் தகுதி சுமந்திரனுக்கு கிடையாது என்று செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post