பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின்சார இணைப்பைத் துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் பட்டியலைத் தயாரித்து அவர்களின் மின்சார இணைப்புக்களைத் துண்டிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக வாடிக்கையாளர்கள் சிலர் பல மாதங்களாக கட்டணம் செலுத்தவில்லை என்றும், அவர்களுக்குச் சிலகாலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆயினும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாதுள்ளனர் என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. அது தொடர்பில் இலங்கை மின்சார சபை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
அதேவேளை, இலங்கை மின்சார சபையின் நிதி நிலை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார சபை ஊழியர்களுக்கு சம்பளம் மிகவும் சிரமத்தின் மத்தியில் வழங்கப்பட்டுள்ளது என்று சங்கத்தின் பிரதம செயலாளரான ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
Discussion about this post