இலங்கை அரசாங்கத்தைப் பிணை எடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் புலம்பெயர் அமைப்புக்களை பயன்படுத்த முயல்கின்றார்.
இலங்கை அரசாங்கத்துக்கு அவர் வழங்கிய முன்மொழிவானது அவரால் செயற்படுத்த முடியாத ஒன்றாகும் என்று அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ளாது, இலங்கையின் ஊழல் நிறைந்த அரசாங்கத்தைப் பிணை எடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு புலம்பெயர் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கேட்டுக் கொள்கின்றன என்று அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர் இலங்கையின் பாதுகாப்புச் செலவினம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், அது 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை, 2009ஆம் ஆண்டு இலங்கைப் படைகளில் ஒரு லட்சம் சிப்பாய்கள் இருந்தனர் என்று மதிப்பிடப்படும் நிலையில், தற்போது அது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது.
நீண்ட கால தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு உண்மையாகவும் இதயசுத்தியுடனும் தீர்வு கண்டிருந்தால் இலங்கை தற்போதைய பாரதூரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்காது என்று தெரிவித்துள்ள அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை தமது சொந்த இலாபங்களுக்காக ஒரு ஊழல் நிறைந்த ஆட்சிக்கு தொடர்ந்தும் முட்டுக் கொடுப்பதைத் தமிழ்க் கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளது.
வரலாற்று அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு உண்மையான நம்பகமான மூன்றாம் தரப்பினரின் பிரசன்னம் இல்லாமல் இலங்கை அரசாங்கத்துடன் எந்தவிதமான பேச்சுகளிலும் ஈடுபடமாட்டார்கள் அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை, 2002 சமாதானப் பேச்சுவார்த்தைகளின் அனுபவங்களின் அடிப்படையில், புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னுமொரு ‘சமாதானப் பொறிக்குள்’ விழத் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
Discussion about this post