ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒரு சர்வாதிகாரி என்று தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், புடின் அதிகாரத்தில் நீடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
போலந்தில் உரையாற்றியபோதே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆனால் இந்த உரை ஆட்சி மாற்றம் கோரும் உரை அல்ல என்று வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.
கடவுளின் பெயரால் இந்த மனிதன் இனியும் அதிகாரத்தில் நீடிக்க முடியாது என்று கூறியுள்ள ஜோ பைடன், நேட்டோவின் எல்லைக்குள் ஒரு சிறு அங்குலம் கூட முன்னேறி அடி வைக்க முடியும் என்று எண்ணிவிட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
ஜோ பைடனின் உரை போர்ப் பதற்றத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்ததுடன், சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.
அதேநேரம், ரஷ்யாவில் யார் அதிகாரத்தில் இருப்பது என்பதை பைடன் தீர்மானித்து விட முடியாது என்று உடனடியாகவே ரஷ்யா எதிர்வினையாற்றியிருக்கின்றது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், போலந்துத் தலைநகரில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் அகதிகளை நேரில் சந்தித்துள்ளார். அவர்களுடன் உரையாடும்போது அவர் புடினை கசாப்புக் கடைக்காரன் என்று வர்ணித்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Discussion about this post