நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 14 முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக நிதி அமைச்சின் செயலாளரான எஸ்.ஆர்.ஆட்டிகலவுடன் இணைந்து இந்த விடயம் தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த ஆறு மாதங்களுக்கு 14 முக்கியமான மருந்துகள் இறக்குமதி செய்யப்படும் திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். எனவே, ஏனைய மருந்துகளுக்கும் முன்னுரிமை கொடுப்பதால், எதிர்காலத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.
எனினும், அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்று அவர் ஒப்புக்கொண்டார்.
75 வீதத்திலிருந்து 80 வீதமான மருந்துகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படு கின்றன. அதேவேளை ஐந்து வீதம் சீனாவிலிருந்தும், மேலும் ஐந்து முதல் 10 வீதம் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்து மிகக் குறைவான அளவில் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தரம் குறைந்த மருந்துகள் கிடைக்கின்றன என எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், அரசாங்கம் இறக்குமதி செய்யும் மருந்துகள் தேவையான தரத்திற்கு உட்பட்டவை எனவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post