தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் நேற்று நடைபெற்ற தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளை அபகரித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி சாந்தபுரத்திலிருந்து வந்த நால்வரே இந்த நகை அபகரிப்பில் ஈடுபட்டனர் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இரு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், பெண்கள் இருவர் தலைமறைவாகியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருவிழாவில் பங்கேற்ற அடியவர்கள் நால்வரிடம் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டன. அவர்கள் மூதாட்டி ஒருவரிடம் தங்கச் சங்கிலி அச்சுறுத்திப் பறிக்கப்பட்டிருந்தது. நகைகளைப் பறிகொடுத்த நால்வரும், அது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும், கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 33 மற்றும் 37 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் வான் ஒன்றிலேயே இங்கு வந்துள்ளனர்.
நகைகளை அபகரிக்க உதவினர் என்று சந்தேகிக்கப்படும் இரு பெண்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து கைச்சங்கிலி ஒன்றும், சங்கிலி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்கள் பயணித்த வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
Discussion about this post