பயங்கரவாத தடுப்பு திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது, ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், பயங்கரவாத தடுப்பு திருத்தச் சட்டமூலம்மீதான விவாதம் ஆரம்பமானது.
விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட ஆளுங்கட்சியினர், சட்டமூலத்தை வரவேற்று உரையாற்றியதுடன், இதன்மூலம் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிட்டனர்.
அத்துடன், இது இறுதியான நகர்வு அல்லவெனவும், ஆரம்பக்கட்ட திருத்தமே எனவும், எதிர்காலத்திலும் மாற்றங்கள் செய்யப்படும் எனவும் சுட்டிக்காட்டினர்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில், எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல சில திருத்தங்களை முன்வைத்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் நபர் 24 மணிநேரத்துக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்,
18 மாதங்கள் தடுத்து வைக்கப்படுவதை ஒரு வருடமாக்கப்பட்டுள்ளது.
அதனை இரு மாதங்கள்வரை குறைக்க வேண்டும் என்பனவே அவை. எனினும், இவற்றை ஏற்பதற்கு ஆளுந்தரப்பு மறுத்துவிட்டது.
விவாதத்தின் முடிவில் சட்மூலம்மீது அநுரகுமார திஸாநாயக்க வாக்கெடுப்பை கோரினார். இதன்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது சட்டமூலத்துக்கு ஆதரவாக 86 பேரும், எதிராக 35 பேரும் வாக்களித்தனர்.
அதன்பின்னர் குழுநிலையின்போது சட்டமூலம் திருத்தப்பட்டது. வெளிவிவகார அமைச்சரால் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அதன்பின்னர் சட்டமூலம் திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என பிரதி சபாநாயகர் அறிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிராக வாக்களித்தன.
Discussion about this post