ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணம் தொடர்பில் இன்று நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்துரையாடப்படவுள்ளது.
அதேநேரம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரை நேற்றுமுன்தினம் சந்தித்துள்ளனர்.
அந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசமைப்பொன்றை உருவாக்கினால், இலங்கையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, இலங்கையில் போர்க் குற்றங்கள் நடக்கவில்லை என்பது ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது என்று கூறினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை எடுத்துள்ள முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்த ஆணையாளர், அதில் மேலும் பல மாற்றங்கள் அவசியம் என்பதை வலியுறுத்தினார் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு இணங்க அதை மீள்பரிசீலனை செய்து திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை, பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடித் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Discussion about this post