ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6ஆவது தடவையாக இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பதவியேற்பு நிகழ்வு குறைந்தபட்ட பங்கேற்பாளர்களுடன் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
நாட்டு மக்களின் எதிர்ப்பை அடுத்து மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியிருந்தார். அதையடுத்து ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 26ஆவது பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச பதவி விலகியதும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஜனாதிபதி பதவியில் இருந்த கோத்தாபய ராஜபக்ச விலகினால் மட்டுமே பிரதமராகப் பதவியேற்க முடியும் என்று சஜித் பிரேமதாச நிபந்தனை விதித்திருந்தார். மற்றொரு எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தியும் இந்த நிபந்தனையை விதித்திருந்தது.
அதையடுத்து ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி கோத்தாபய ராபஜக்ச பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் பதவியை ஏற்க ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்ததை அடுத்து இன்று பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சில நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்பத் தயார் என்று இன்று சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்குக் கடிதம் அனுப்பியபோதும், அதை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
இன்று மாலை 6.30 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய தேசியக் கட்சி, நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தையே கொண்டுள்ளது.
தேர்தலில் படுதோல்வியைச் சந்திருந்திருந்த நிலையில் தேசியப்பட்டியல் ஊடாகக் கிடைத்த ஒரு ஆசனத்தில் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் வந்திருந்தார்.
Discussion about this post