இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத்தேர்தலொன்றின்போது ‘யானை’ சின்னம் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தலாக இம்முறை தேர்தல் அமையவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர் பொது சின்னமொன்றின்கீழ் தேர்தலை எதிர்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதன்படி அன்னம் சின்னம் கேஸ் சிலிண்டராக மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது என்று ஐதேக தரப்பு தெரிவிக்கின்றது.
இலங்கையில் 1947 ஆம் ஆண்டிலேயே முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியையும் பிடித்தது.1952, 1956, 1960, 1965, 1970, 1977, 1989, 1994, 2000, 2001, 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் யானை சின்னத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட்டது.2010, 2015 பொதுத்தேர்தல்களின்போது கூட்டணி அமைத்து ஐதேக களமிறங்கி இருந்தாலும் யானை சின்னமே முன்னிலைப்படுத்தப்பட்டது. 2020 பொதுத்தேர்தலின்போதுகூட யானை சின்னத்திலேயே ஐதேக தேர்தலுக்கு வந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இம்முறை ‘யானை’ சின்னத்தை கைவிட்டு பொது சின்னத்தில் களமிறங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவே புதிய கூட்டணிக்கு தலைமை வகிக்கவுள்ளார்.சேவல் சின்னத்தில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட இதொகா, கேஸ் சின்னத்தில் கூட்டணியாக போட்டியிடுவது தொடர்பில் பரீசிலித்துவருகின்றது. 1977 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டுள்ளார். ஆனால் இம்முறை அவர் போட்டியிடமாட்டார்.
Discussion about this post