இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய வௌித்தரப்பிற்கு
இடமளிக்கும் 46/1 பிரேரணையை அரசாங்கம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர்
பேராசிரியர் G.L.பீரிஸ் இன்று அறிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வில் காணொளியூடாக
உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் தெரிவித்ததாவது,
46/1 தீர்மானத்தின் மூலம் ஏற்படுத்துவதாகக் கூறப்பட்ட வெளித்தரப்பு
நடவடிக்கைகளுக்கான முன்மொழிவை நாம் நிராகரிக்கும் அதேவேளை, சம்பந்தப்பட்ட
விடயங்களில் உள்நாட்டு நடவடிக்கையூடாக, வலுவாக செயற்படுவோம். 30/1
தீர்மானத்தில் நாம் எதிர்நோக்கியவாறு இதுவும் எமது மக்களிடையே பிரிவினையை
ஏற்படுத்தும். மனித உரிமைகள் பேரவை தனது அடிப்படைக் கொள்கைகளை பின்பற்ற
வேண்டும். சம்பந்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்பு இன்றி ஆரம்பிக்கப்பட்ட
வெளித்தரப்பு நடவடிக்கைகள் மூலம், குறிப்பிட்ட இலக்குகளை அந்த நாட்டினால்
அடைய முடியாது என்பதுடன், அது அரசியல்மயமாக்கலுக்கு உட்படுத்தப்படும்.
மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளதாகவும் பேராசிரியர்
G.L.பீரிஸ் இதன்போது அறிவித்தார்.
மேலும், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
குறித்தும், வௌிவிவகார அமைச்சர் தௌிவுபடுத்தினார்.
சர்வதேச ஒழுங்குகள் மற்றும் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கமைய பயங்கரவாத
தடைச்சட்டத்தை மீள் பரிசீலனை செய்வதற்கு அமைச்சரவை உப குழுவொன்று
நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மாத இறுதியில் அமைச்சரவையில் அதன்
அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின்
வழக்குகளை விரைவுபடுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் ஆலோசனைக்
குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான
வழக்குகளை விரைவாக முடிவிற்குக் கொண்டுவரும் நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொறுப்புக்கூறல், காணாமல் போனோர்
விவகாரம், முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீள்
பரிசீலனை செய்வதற்கு, உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில்
விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த ஆணைக்குழு தமது
இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது. எதிர்வரும் ஆறு
மாதங்களுக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
எனவும் G.L.பீரிஸ் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், உரிய
சட்ட ஒழுங்குகளுக்கு அமைய, இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று
நடத்தப்பட்ட கொடூராமான பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகள் தொடர்பில்
தொடர்ச்சியாக விசாரித்து வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறினார்.
Discussion about this post