இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள
கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, மணல்காடு கடற்கரையில் இன்று அதிகாலை
முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக
இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்பரப்பில் இடம்பெறுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத
செயற்பாடுகளை தடுப்பதற்கான விசேட சோதனை நடவடிக்கைகளை கடற்படையினர்
தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றை கடற்படையினர்
சோதனைக்கு உட்படுத்த முயன்றபோது, சில மூடைகளை கடலில் வீசி சந்தேகநபர்கள்
தப்பிச்செல்ல முயன்றதாக கடற்படை அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சுமார் 140 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு
சந்தேகநபர்களை கடற்படையினர் இதன்போது கைது செய்துள்ளனர்.
பருத்தித்துறையை சேர்ந்த 22 மற்றும் 26 வயதான இரண்டு சந்தேகநபர்களும்
சர்வதேச கடல் எல்லையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து கேரள
கஞ்சாவை பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக
விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post