தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட பௌத்தமய மாக்கல் செயற்பாடுகளை நிறுத்தக்கோரியும், பயங்கரவாத எதிர்ப் புச் சட்டத்தை நிறைவேற்றுவதை நிறுத்தக்கோரியும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப்போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
இது தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது:-
எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு முன்வைக்கப்படுகின்றது. அன்றையதினம் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாடாளுமன்றத்தினுள் வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறியல் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.
இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவை வழங்கும். அதேநாளில் தமிழர் தாயகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு எதிர்ப்பு வெளியிடுவது மாத்திரமல்லாமல் இங்கு முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பை வெளிக்காட்டுவது இதன் நோக்கமாகும். இந்தப் போராட்டத்துக்கு முஸ்லிம் மற்றும் மலையகக் கட்சிகளும் ஆதரவை வழங்கவுள்ளன – என்றார்.
கல்வியன்காட்டிலுள்ள ஈ.பி.ஆர்.எல். எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நேற்றுக்காலை கூடினர்.
இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், தமிழ்த் தேசியக் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Discussion about this post