அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை நேற்று (20) அனுமதி வழங்கவுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கமென என பெயரிடப்பட்டுள்ள தற்போதைய அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று (20) மாலை நடைபெறவுள்ளது.
இதன்போது உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கவுள்ளது. இந்த தகவலை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தினார்.
21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் இழுபறி நிலையில் உள்ள சரத்துகள் தொடர்பில் இதன்போது இறுதி முடிவு எடுக்கப்பட்டு, சட்டமூலத்துக்கு மொட்டு கட்சியின் இணக்கப்பாடு பெறப்பட்டது.
21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு அவசியம். எனினும், 21 இல் உள்ள சில சரத்துகளுக்கு அக்கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையிலேயே சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட இன்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின்போதே, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும், கட்சிகளின் ஆலோசனைகளை, திருத்தங்களை உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு, இரு தடவைகள் சர்வக்கட்சி கூட்டமும் நடத்தப்பட்டது.
அமைச்சரவை அனுமதியின் பின்னர், சட்டமா அதிபரின் சான்றுரை கிடைக்கப்பெற்ற பின்னர் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும். அதன்போதே உள்ளடக்கங்கள் தொடர்பில் தெளிவான விளக்கத்தை பெறக்கூடியதாக இருக்கும்.
வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதனை சவாலுக்குட்படுத்த 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இக்காலப்பகுதியில் உயர்நீதிமன்றத்தை நாடலாம்.
உயர்நீதிமன்றத்தில் சட்ட விளக்கம், யோசனைகள் என்பன மூன்று வாரங்களுக்குள் ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் சட்டமூலம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட்டு, சட்டம் இயற்றும் பணி இடம்பெறும்.
Discussion about this post