நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். அதைச் செய்வதாக இருந்தால் தேர்தல் முறைமையில் மாற்றமும் அவசியம். மாகாணங்களை கட்டுப்படுத்தும் ஏற்பாடு நாடாளுமன்றத்துக்கு இருக்க வேண்டும். 21ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் முடிவுக்கு என்னால் உடன்பட முடியாது. அதனால்தான் முன்கூட்டியே பதவி விலகினேன்.
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமயகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என அம்முறையை உருவாக்கப்பட்ட தருணம் முதல், வலியுறுத்தி வருகின்றோம். ஜனாதிபதித் தேர்தல்களின்போது உறுதிமொழிகளையும் வழங்கியுள்ளோம். கடந்தமுறை மட்டும்தான் அந்த உறுதிமொழி வழங்கப்படவில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது குறித்து சாதகமான நிலைப்பாட்டிலேயே எமது கட்சி இருக்கின்றது. அது நடக்க வேண்டுமானால் தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும். தற்போதைய முறைமையின்கீழ் நிலையான நாடாளுமன்றம் அமையாது.
அடுத்ததாக மாகாணங்களை கட்டுப்படுத்தும், அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். இந்தியாவில் மாநிலங்களை கட்டுப்படுத்தும் ஏற்பாடு நாடாளுமன்றத்துக்கு உள்ளது. அதேவேளை, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு நான் எதிர்ப்பு. இது எனது தனிப்பட்ட கருத்து.
நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. சுயாதீன ஆணைக்குழுக்கள் போன்ற விடயங்கள் வரவேற்கத்தக்கது. ஆனால் தற்போதைய பிரதமருக்கு மக்கள் ஆணை இல்லை. அவர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
21க்கு உரித்துடையவர் யார் என்ற சர்ச்சை உள்ளது. இது தொடர்பில் தெளிவு பெறவே பிரதமரைச் சந்தித்தோம். 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் எமது கட்சி உறுப்பினர்கள் மனசாட்சியின் பிரகாரம் வாக்களிப்பார்கள்.
21 தொடர்பில் அரசு எடுக்கும் முடிவுக்கு என்னால் உடன்பட முடியாது. அதனால்தான் முன்கூட்டியே பதவி விலகினேன் என்றார்.
Discussion about this post