அரசமைப்பின் 21ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடையை வெற்றிக்கொள்ள அனைத்து மக்களின் ஒத்துழைப்பும் தேவை. புதிய அரசமைப்பு விரைவில் உருவாக்கப்படும்.
இவ்வாறு நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சிவில் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிகளைச் சந்தித்து நேற்றுமுன்தினம் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் 21 ஆவது திருத்தச் சட்ட வரைபு தொடர்பில் முஸ்லிம் சிவில் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிகள் 4 யோசனைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 21 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்கிக் கொள்வதற்கு மக்களின் ஆதரவு முக்கியமானதாகும். புதிய அரசமைப்பு வெகுவிரைவில் உருவாக்கப்படும்.
அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசமைப்பின் 21 ஆது திருத்தம் விரைவாக நிறைவேற்றிக்கொள்ளப்பட வேண்டும்.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு,பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றின் சுயாதீனத்தன்மை மட்டுப்படுத்தப்பட்டதுடன்,தேசிய பெறுகை ஆணைக்குழு, கணக்காளர் நாயகம் ஆணைக்குழு இரத்துச் செய்யப்பட்டன.
21 ஆவது திருத்தம் ஊடாக ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் பலப்படுத்தப்பட்டு தேசிய பெறுகை மற்றும் கணக்காளர் நாயகம ஆகிய ஆணைக்குழுக்கள் மீள ஸ்தாபிக்கப்படும்.- என்றார்.
இந்தச் சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சை மாத்திரம் ஜனாதிபதி வகித்தல், அமைச்சரவை நியமனத்தின்போது ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையை பெறல், பிரதமரை நீக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியிடமிருந்து நீக்கி அதனை நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு உட்படுத்தல், அரசமைப்பு பேரவை நடுநிலை வகித்தல் அதற்காக 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் பிரதிநிதிகள் 5 பேரை நியமிப்பது உள்ளிட்ட 4 யோசனைகளை முஸ்லிம் சிவில் அமைப்பினர் நீதியமைச்சரிடம் முன்வைத்தனர்.
இந்த யோசனைகளை அமைச்சரவையில் முன்வைப்பேன் என்று நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post