21ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டாக பிளவடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறியமுடிகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ள போதும், சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
புதிய அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்படுவது மற்றும் ஜனாதிபதி அதிகாரங்களில் ஒரு பகுதியை பிரதமருக்கு பகிர்வது தொடர்பாகவே பொதுஜன பெரமுனவை சேர்ந்த சிலர் எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.
இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் பஸில் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகின்றது. ஒரு சிலரை குறி வைக்கும் நோக்கில் அரசமைப்புத் திருத்தச் சட்டங்களை கொண்டு வரக் கூடாது என அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையால் புதிய திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பெரும்பாலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தாலும், ஒரு தரப்பு எதிராக வாக்களிக்கலாம் அல்லது வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாது தவிர்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அதேவேளை, 21ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்துரையாட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post