நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்று மக்கள் போராட்டங்கள் வீரியமடைந்துள்ள நிலையில் நாட்டின் 3 பிரதான பௌத்த மகாபீடங்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கையில் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பௌத்த மகா சங்க ஆணையை பிரகடனப்படுத்த வேண்டி ஏற்படும் என்று அவை எச்சரிக்கை விடுத்துள்ளன.
மகா சங்க ஆணை என்பது, பௌத்தர்கள் மத்தியில் அதி மரியாதைக்குரியது என்பதாலும், இறுதி அஸ்திரமாகவே அந்த வழக்கம் உபயோகப்படுத்தப்படுவதாலும் மகா சங்கத்தினரின் இந்த அறிவிப்பு தெற்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை, நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினையைத் தீர்க்க எந்த வகையிலும் உதவாது என்று தெரிவித்துள்ள மகா சங்கங்கள், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், ஏனைய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து தங்களது யோசனைத் திட்டத்தை உடனடியாக முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
20ஆவது திருத்தத்தை நீக்கி, 19ஆவது திருத்தச் சட்டம் மீளக் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்துள்ள மகாசங்கங்கள், இந்த நெருக்கடிக்கு நாட்டை ஆண்ட அனைத்து அரசாங்கங்களுமே காரணம் என்றும் தெரிவித்துள்ளன.
அமைச்சர்களும், அதிகாரிகளும் எந்த வரப்பிரசாதங்களையும் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்துள்ள அவை, போராட்டங்களைக் கட்டுப்படுத்த பலத்தைப் பிரயோகத்தில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.
பௌத்த மகா சங்க ஆணை என்பது மகா சங்கத்தினரால் வெளியிடப்படும் ஒரு அறிவிப்பாகும். அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது பண்டைய காலம் தொட்டு பௌத்தர்கள் மத்தியில் இருக்கும் வழக்கமாகும்.
மன்னராட்சிக் காலம் முதல் பௌத்தர்கள் மத்தியில் உள்ள இந்த நடைமுறையானது, ஏதேனும் ஒரு விடயத்துக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்படும் இறுதி அஸ்திரம் என்றே கருதப்படுகின்றது.
இந்தப் பௌத்த சாசனத்தை மீறுவோரை மகா சங்கங்கள் முற்றிலும் ஒதுக்கி வைக்கும் அறிவித்தலை விடுக்கும் என்றும், அதனால் அவர்கள் பல்வேறுபட்ட நெருக்கடிகளைச் சந்திப்பர் என்றும் கூறப்படுகின்றது.
ஆயினும் இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின்னர் பௌத்த மகா சாசனம் வெளியிடும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை என்றும் கூறப்படுகின்றது.
Discussion about this post