எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சலஸ் இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் சேர்த்துக்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
1900ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளின் போது முதன் முதலாக கிரிக்கெட் விளையாடப்பட்டது. 128 ஆண்டுகளின் பின்னர் தற்போது மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி பேஸ்பால், சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை மும்பையில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட புதிய விளையாட்டுகளைச் சேர்ப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான கலந்துரையாடல்களின் போது ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் அதனை இருபதுக்கு இருபது ஆட்டமாக நடத்த முடியும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
மேலும், ஐ.சி.சி தரவரிசையில் முதல் ஆறு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு நேரடியாக தகுதி பெறும் எனவும் ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
Discussion about this post