அட்டளைச் சேனையில் 11 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த 23ஆம் திகதி நடந்துள்ளது. 11 வயதுச் சிறுமி தனது குடும்பத்தினருடன் இரவு வேளை கடற்கரைக்குச் சென்றுள்ளார். இடைநடுவே மூத்த சகோதரி வீடு செல்ல நேர்ந்துள்ளது. குடும்பத்தினர் கடற்கரையில் இருக்க, மூத்த சகோதரி 11 வயதுச் சிறுமியுடன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
வீட்டில் சகோதரியை விட்டுவிட்டு மீண்டும் சிறுமி கடற்கரை திரும்பியுள்ளார். கடற்கரைக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை யாரும் இல்லாத இடத்தில் இருவர் வழிமறித்துள்ளனர். சிறுமியின் வாயை கையால் பொத்தியவாறு அருகில் இருந்த வீட்டுக்குத் தூக்கிச் சென்றுள்ளனர்.
அங்கு ஒருவர் வெளியே காவல் இருக்க மற்றையவர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்தச் சம்பவத்தை எவரிடமும் கூறக்கூடாது என்றும், அழைத்தால் மீண்டும் வரவேண்டும் என்று சிறுமியை மிரட்டிய அவர்கள், மதிலுக்கு மேலாக சிறுமியை தூக்கி வீசியுள்ளனர்.
சிறுமி தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒலுவிலைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் சிறுமியின் உறவினர்கள் என்று தெரியவருகின்றது.
இந்தச் சம்பவத்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.எம்.ரிபாஸ்தீன் சமூகவலைத்தளம் ஊடாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
Discussion about this post