இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறியதற்காக ஹமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என்று நிதி செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ஹமில்டன் ரிசர்வ் வங்கியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது “நெருக்கடியில் உள்ள ஒரு நாட்டின் மீது செல்வாக்கு செலுத்தி மற்ற வெளிநாட்டு கடன் வழங்குநர்களை விட அதிக நலன் பெறுவதற்கான வெளிப்படையான முயற்சி” என தெரிவித்துள்ள சிறிலங்கா அரசாங்கம் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
ஒரு பில்லியன் டொலர் இறையாண்மை பத்திரத்தை, இலங்கை அரசாங்கம் செலுத்த தவறியதை காரணம் காட்டி கரீபியன் தீவுகளான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸை தளமாக கொண்ட ஹமில்டன் ரிசர்வ் வங்கி சிறிலங்கா அரசாங்கம் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளது.
சர்வதேச இறையாண்மை பத்திரங்களை 5.875% வட்டியில் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி சிறிலங்கா அரசாங்கம் மீள செலுத்த வேண்டியிருந்தது.
இதேவேளை நீதிமன்ற ஆவணங்களின்படியும் ஹமில்டன் ரிசர்வ் வங்கியின் பத்திரங்களின் விதிமுறைகளின்படியும் சிறிலங்கா அரசாங்கம் ஹமில்டன் ரிசர்வ் வங்கிக்கு மொத்தமாக 257,539,331.25 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது.
Discussion about this post