சாவகச்சேரி(Chavakachcheri) வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா(Archuna) மீதான வழக்குகள் சாவகச்சேரி நீதிமன்றில், நீதவான் அ.யூட்சன் முன்னிலையில் இன்று(31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட ஐந்து(5)வழக்குகளே இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தன.
எதிரான வழக்குஇதன்போது வைத்தியர் அர்ச்சுனா சார்பாக சட்டத்தரணி எஸ்.செலஸ்ரின் முன்னிலையாகியிருந்தார்.
வைத்தியர் அர்ச்சுனா, ஊழல்,மோசடிகளை தடுக்கும் முகமாகவே கடமை நேரத்தில் வைத்தியர்கள் வெளியே செல்வதனைத் தடுத்திருந்தார் எனவும், வைத்தியர்கள் கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றிவிட்டு பின்னர் மேலதிக நேரக் கடமை என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை சூறையாடுவதாகவும் அவர் தனது வாதத்தின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், மக்களுக்கு சேவை செய்யவேண்டிய நேரத்தை வீணாக வழக்குகளில் வைத்தியர்கள் கழிக்கிறார்கள் எனவும், இந்த வழக்கு இணக்கப்பாடு காணப்படவேண்டிய வழக்குகள் என்பதால் மத்தியஸ்த சபைக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவர் மன்றிடம் வேண்டுகோள் விடுத்தார்.வழக்கு தொடுநர் சார்பாக சட்டத்தரணி திருக்குமரன் இன்றைய தினம் முன்னிலையாகியிருந்தார். இதன்போது இரு தரப்பு வாதங்களையும் கவனத்தில் கொண்ட நீதவான், அனைத்து வழக்குகளையும் எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post