நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் , உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் போன இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் உட்படப் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று நீர்கொழும்பில் கத்தோலிக்க மக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தையும், பேரணியையும் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதற்கு முன்பாக நீர்கொழும்பு தேவாலயங்களில் காலை ஆராதனை இடம் பெற்றது. பின்னர் காலை 8 மணி முதல் அங்கிருந்து மக்கள் நகரின் வர்த்தகப் பிரதேசம் அமைந்துள்ள கிரீன்ஸ் வீதியில் ஒன்றுதிரண்டனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டனர்.
சர்வமத தலைவர்கள் உட்பட பல தரப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர். ஆர்ப்பாட்ட பேரணியில் பங்குபற்றியோர் சுலோக அட்டைகளை ஏந்தி இருந்ததோடு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டப் பேரணியை தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பங்கு பற்றி உரையாற்றினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகள் யாரென்பது தற்போது அம்பலமாகிவருகின்றது.. சூழ்ச்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்கமுடியும். ஆனால் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்று தனது உரையில் கொழும்பு ஆயர் குறிப்பிட்டார்.
Discussion about this post