யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தில் அரசியல் செய்கின்றோம் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் அரசியல் தலையீடு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கப்படாமல், அரசியல் தரப்பின் ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது.
இதனையடுத்து பிரதமர் அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவர் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு பட்டியல் மீளாய்வு இடம்பெற்றது. இவ்வாறானதொரு நிலையிலேயே, யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
‘பிரதேச செயலகத்தால் வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் அவ்வாறு அரசால் வழங்கப்படும் வீடுகளின் உரிமையாளர்களைச் சென்று சந்திக்கும் உங்களின் (அங்கஜனின்) ஆதரவாளர்கள், அண்ணா (அங்கஜன்) வீடு தந்தவர்.
அவருக்கு நீங்கள் வேலை செய்யவேண்டும் என்று கூறுகின்றனரே’ என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இ.அங்கஜன், நான் பொறுப்புக்கூறக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்.
அரச அலுவலகங்களுக்கு தங்களுக்கு வீடு தேவை என்று எப்படி பாதிக்கப்பட்ட மக்கள் செல்வார்களோ அதேபோன்று என்னிடமும் வருவார்கள். அவ்வாறு வருபவர்களின் பெயர்ப்பட்டியலை நான் மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் என்பவற்றுக்கு கொடுப்பேன்.
அவர்கள் அதை சரிபார்த்து இதனை சிபாரிசாக எடுத்து வீடுகள் வழங்கியிருப்பார்கள். எங்களுடையவர்களாகத்தான் வீடு கொடுக்கப்பட்டிருந்தால் நாங்கள் நிச்சயமாக அதைச் சொல்வோம்.
எங்களூடாக சிபார்சு செய்யப்பட்டு தகுதி அடிப்படையில் அவருக்கு வீடு கொடுக்கலாம் என்று பிரதேச செயலகத்தால் கொடுக்கப்பட்டிருந்தால் அதற்கு அப்பால் நாங்களும் அரசியல் செய்தால்தான் இன்று மக்களுடன் இருந்து மக்களுக்கான வேலைகளை இன்னும் அதிகம் செய்ய முடியும்.
வீடுகள் வழங்கப்பட்ட பின்னர் அவர்களுடனான தொடர்பாடலை அதிகரிப்பதற்காக அவர்கள் (அங்கஜனின் ஆதரவாளர்கள்) அப்படிச் செய்திருக்கலாம். சகல விடயங்களையும் மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் செய்யும் என்றால் நாங்கள் எதற்கு? மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக ஏன் என்னை நியமித்திருக்கின்றார்கள்? எல்லாவற்றையும் அரச அதிகாரிகளை வைத்துச் செய்திருக்கலாமே? என்றார்.
Discussion about this post