வியட்நாம் அருகே ஆழ் கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் கப்பல் தொடர்பான மேலதிக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிய கப்பலில் மிக நெருக்கமாக அடைத்து ஏற்றப்பட்டிருந்த அகதிகள் அனைவரும் மியான்மரில் இருந்து கனடா நோக்கிய ஆபத்தான நீண்ட கடற்பயணத்தை-பெரும் நிதிச் செலவில் மேற்கொள்ளவிருந்தனர் என்று கூறப்படுகிறது.
தென் சீனக் கடல் வழியாகப் பசுபிக் கடலைக் கடக்கின்ற – மிகச் சவாலான – தற்கொலைக்குச் சமனான – துணிகரப் பயணம் அது என்று வியட்நாமின் செய்தி ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
“லேடி ஆர் 3” என்னும் அந்த மீன்பிடிக் கப்பலில் கதறிக் கொண்டிருந்த இலங்கையர்கள் 303 பேரையும் தாங்கள் பொறுப்பேற்றுள்ளோம் என்று வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அவர்களில் 19 பெண்கள், 20 குழந்தைகளும் அடங்குவர்.
மியன்மார் நாட்டுக் கொடியுடன் காணப்பட்ட அந்தக் கப்பல் கடும் காற்றும் கொந்தளிப்புமான கால நிலைக்கு மத்தியில் கப்பலின் இயந்திர அறைக்குள் நீர் புகுந்ததால் அது மூழ்கும் ஆபத்து நிலைக்குச் சென்றுகொண்டிருந்தது. அதனால் அதிலிருந்தோர் அவலக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
கப்பல் மூழ்குவது பற்றிய முதலாவது தகவல் இலங்கைக் கடற்படையிட மிருந்து வியட்நாம் கரையோரக் காவல் மற்றும் மீட்புப் படையினருக்கு திங்கட்கிழமை காலை கிடைத்தது.
சிங்கப்பூரில் இருந்து அதேகடல் வழியாகச் சென்றுகொண்டிருந்த ஜப்பான் நாட்டின்’ஹெலியோஸ் லீடர்’ என்ற சரக்குக் கப்பல் உடனடியாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பலை நோக்கித் திருப்பப்பட்டது.
40 நிமிட நேரத்தில் அகதிகள் கப்பலை நெருங்கிய ஜப்பானியக் கப்பல் அதிலிருந்த 303 பேரையும் மீட்டது. இந்த மீட்பு முயற்சிக்கு வியட்நாமின் கடற்படைப் படகுகள் உதவின.
பலர் நோய்வாய்ப்பட்டும் நெரிசலில் காயமடைந்தும் காணப்பட்ட பல அகதிகளுக்குக் கப்பலில் வைத்து முதலுதவி அளிக்கப்பட்டது. அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வுங் தோ மாகாண அதிகாரிகளிடம் கைகயிக்கப்படுவர் என்ற தகவலை வியட்நாமின் செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
கப்பல் மாலுமிகள் மற்றும் பயண ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகே இந்த ஆபத்தான கடற்பயணம் தொடர்பான பின்னணித் தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
Discussion about this post