வவுனியா பஸ் விபத்தில் உயிரிழந்த நாவலப்பிட்டி மாணவி ராமகிருஸ்ணன் சயகரியின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக நாவலப்பிட்டி நகரிலுள்ள அன்னாரது வீட்டில் வைக்கப்பட்டு, மாலை இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.
வவுனியா – நொச்சுமோட்டை பகுதியில் நேற்று (05) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 23 வயதான ராமகிருஸ்ணன் சயகரி உயிரிழந்திருந்தார்.
உரிழந்த மாணவி யாழ்.பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் முதலாமாண்டில் கல்வி பயில்பவராவார். விடுமுறைக்காக வீடு சென்றபோதே அவர் விபத்தில் சிக்கியுள்ளார். சயகரியின் பெற்றோர், விசேட தேவையுடையவர்கள் என்பதோடு, சகோதரன் மற்றும் சகோதரியை கொண்ட குடும்பத்தில், சயகரி மூத்தவராவார்.
வவுனியா பகுதியில் நேற்று அதிகாலை பஸ் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளானதில், பஸ்ஸின் சாரதி உட்பட மூவர் உயிரிழந்திருந்தனர். உயிரிழந்தவர்களில் பருத்தித்துறையைச் சேர்ந்த 25 வயதான நிதர்சன் வெளிநாடு செல்வதற்காகச் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளார்.
சாரதியும், பல்கலைக்கழக மாணவியும் தூக்கி வீசப்பட்டு கல்லுடன் மோதுண்டனர். மற்றையவர் கண்ணாடி உடைந்து வெளியே விழுந்துள்ளார். அவர் மீது பஸ் சரிந்துள்ளது.
அதேவேளை, வவுனியா மாவட்டத்தில் இந்த விபத்து உள்ளடங்கலாக நேற்று மாத்திரம் 3 அதிசொகுசுப் பஸ் விபத்துக்கள் நடந்துள்ளன.
Discussion about this post