உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய 31 பேரை கோட்டாபய ராஜபக்ச உடனடியாக இடமாற்றம் செய்தார். இது பொய்யல்ல, இது உண்மை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கோட்டாபய ராஜபக்ச நவம்பர் 18 அன்று ஜனாதிபதியாகிறார். நவம்பர் 22 அன்று பிரதமர் நியமிக்கப்படுகிறார். ஆனால் அதற்கெல்லாம் முதலாக, அதாவது ஜனாதிபதி, பிரதமர் நியமிப்புகளுக்கு முன்னரே ஷானி அபேசேகரவை இடமாற்றுகிறார்.
அமைச்சரவை நியமிப்பிற்கு முன்னர் பிரதமர் நியமிப்பிற்கு முன்னர் ஷானியை மாற்றுகிறார்கள். நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய 31 பேரை கோட்டாபய ராஜபக்சவின் பரிந்துரையின் கீழ் இடமாற்றம் செய்துள்ளார்கள். இது பொய்யல்ல, உண்மை.
சிஐடி அதிகாரிகள் 700 பேருக்கு வெளிநாடு செல்வதை தடை செய்தார். நான் இவற்றினை சபைக்கு வழங்குகிறேன். இது பாரிய சந்தேகத்திற்குரியது. ஏன் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி இவ்வாறு செய்தார்? நாங்கள் அது பற்றி அறிய வேண்டும்.
இதற்குப் பின்னால் உள்ள உண்மைகளை நாம் தெரிந்திருக்க வேண்டும். நான் அப்பட்டமான பொய்களை கூறினால் அதற்கு எதிராக விசாரணைகளை நடத்துங்கள். நான் பயமில்லை. விசாரியுங்கள்.
69 இலட்சத்தில் ஒருவன் என்று சொல்லிக் கொண்டு அவர்களை ஏமாற்றி கைகளில் இரத்தக் கரைகளை படிந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை காப்பாற்ற ஏன் துடிக்கிறீர்கள் எனக் கோருகிறேன். நான் கூறுவதை விசாரியுங்கள்.
மேலும், ஷானி அபேசேகர போன்ற நேர்மையான அதிகாரிக்கு எதிராக பழிவாங்கவே பொய்யான வழக்குகளை அவர் மீது திணித்ததாக குறிப்பிட்டார்.
Discussion about this post