மத தலங்களின் மின்சாரக் கட்டணத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என அஸ்கிரி பீடத்தின் பொதுச் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது-
தற்போதைய சூழ்நிலை காரணமாக சில விகாரைகளுக்கு மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத தலங்களில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுதல் போன்ற மாற்று நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.
அவ்வாறான வேலைத்திட்டங்களும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் ஆலயங்கள் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும்.- என்றார்.
அதேவேளை, மத வழிபாட்டுத் தலங்களின் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மத்திய மாகாண மகா சங்க சபையில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஏனைய உப துறை சபைகளை ஒன்றிணைக்க வேண்டும் எனவும் பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கலஹா சிறிசாந்த தேரர், விகாரைகளின் மின் கட்டணம் ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.
வெசாக், பொஸோன் போன்ற காலங்களில் ஆலயங்களை இருளில் மூழ்கடிக்கும் சதியா இது என்ற பலமான சந்தேகம் எமக்கு உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையால் இனி வரும் காலங்களில் விகாரைகளில் ஒரு விளக்கைக் கூட போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
வரவிருக்கும் “போயா “தின நாளில் அனைத்து விகாரைகளினதும் மின்சாரத்தை துண்டித்து, விகாரைகளை இருளில் மூழ்கடித்து எதிர்ப்பு தெரிவிக்கும் யோசனையை இன்று நாம் முன்வைக்கிறோம்.
எதிர்காலத்தில், நாடு முழுவதிலும் எமது தலையீட்டின் ஊடாக மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக செயற்படுவோம் – என்றார்.
Discussion about this post